Wednesday, September 5, 2018

           
கேள்வி .- தியானத்தில் நிலைத்து சமாதி நிலை கூடும் பொழுதுதான் வினைகளை அழிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது. அப்படியானால் தியானம் செய்யும் போது சம்ஸ்காரங்கள் எண்ணங்களைத் தூண்டிக் கொண்டே இருந்தால் நம் மனம் எப்படி தியானத்தில் ஒடுங்கும் ?

பதில் - கேள்வி நியாயமானதுதான் என்றாலும், இது குறித்து பலவிதமான விளக்கங்களைப் பதிவு செய்திருக்கிறேன். படித்துப் பார்த்தீர்களானால் ஓரளவு புரியும். எனினும் கேள்வி கேட்டதினால் சொல்கிறேன்.  மனத் தூய்மை, ஒழுக்கமான வாழ்வு, தன்னலமற்ற தொண்டு மனப்பான்மை இவற்றால் பழைய வாசனைகளை நம்மால் கட்டுப்படுத்தி அடக்கி வைக்க முடியும். இதற்காகவே இயமம், நியமம் போன்ற பயிற்சிகளை முன் வைத்திருக்கிறார்கள். மேலும் உடல் ஆரோக்கியமின்றி ஏற்படும் தடைகளைப் போக்கவும், நீண்ட நேரம் தியானம் செய்ய உடல் தயாராகவும் ஆசனம் தரப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக பிராண சக்தி வலிமை இழந்தால் மனம் சலனமடையும் என்பதால் பிராணாயாமம் மூலம் ப்ராணசக்தியை உடலில் சமன் செய்து கொள்கிறோம். அப்போது புலன்களில் இருந்து மனதைப் பிரிக்கும் பயிற்சியாகப் பிரத்தியாகாரம் விளங்குகிறது. இவ்வளவு பயிற்சிகளையும் முறையாகக் கடைபிடித்தாலன்றி மனதின் பழைய கர்ம பீஜங்களை கட்டுக்குள் கொண்டு வருவது கடினம். முற்றும் துறந்த ஞானிகள் கூட இதனால்தான் ஞானத்தை அடைய தாமதமாகியிருக்கிறது.

புத்தர் எல்லாவற்றையும் துறந்தவுடன் ஞானமடைந்து விடவில்லை. கடினமான தியான முயற்சியும், இடைவிடாத மனப் போராட்டமும் கடந்துதான் அவர் ஞானமடைந்தார் என்று சொல்லப்பட்டுள்ளது. பட்டினத்தார் சகல செல்வங்களையும் துறந்து ஞானமடைவதற்குள் அவர் அடைந்த இன்னல்களும், மனப் போராட்டங்களும் கொஞ்ச நஞ்சமல்ல. இதை அவர் பாடல்களில் உள்ள புலம்பல்கள் மூலம் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் சீடர் பத்திரகிரியாரும் அப்படியே. எனவேதான் பதஞ்சலி யோகசூத்திரம் மனத் தூய்மையின் அவசியத்தை வலியுறுத்துகிறது. சித்தர்கள் கூட தந்திர மார்க்கத்தை கடை பிடித்து ஞானமடைந்தாலும் கூட விஷயங்களை மறைத்து வைத்ததும், மறைமுகமாகச் சொல்வதும் இதனால்தான். அதாவது மனவடக்கம் இல்லாதவர்கள் தந்திர முறையில் சித்திகளைப் பெற்று கொடிய செயல்களில் ஈடுபட்டு விடுவார்கள் என்பதற்காகவே

மனதைத் தூய்மைப்படுத்துவது என்றால் அது, வாசனையை, சம்ஸ்காரங்களை கட்டுப்படுத்துவதே. முதலில் கர்மாசயத்திற்கும் வாசனைக்கும் இடையே உள்ள பிணைப்பை துண்டிக்க வேண்டும். இதை எப்படிச் செய்வது என்றால், அதற்கு இரண்டு வழிகள் சித்தர்களால் சொல்லப்பட்டுள்ளன. ஒன்று தவம். நம்மைத் தூண்டும் உந்துவேகங்களுக்கு அடிமைப்படாமல், அது தூண்டும் செயல்களைச் செய்யாமல் இருப்பது. இதையே சும்மா இருப்பது என்பார்கள். ''சும்மா இருக்கும் சுகம்'' என்கிறார்களல்லவா ? அது. அந்தச் செயலைச் செய்யாமல் தவிர்த்து, அந்த சூழலில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்து வரும் போது அந்த வேகங்கள் பலவீனமடைந்து விடும். எனினும் மனம் தூய்மையடையாத போது தியானம் செய்வது பகீரதப் பிரயத்தனமே. இரண்டாவது, நற்கர்மங்களைச் செய்தல். இதன் மூலம் மனதில் நல்ல சம்ஸ்காரங்கள் உருவாகி விடுகின்றன. அவை அதிகரிக்கும் அளவுக்கு தீய சம்ஸ்காரங்களை அமுக்கி விடுகின்றன. தியானம் செய்து வரவர அவ்வப்போது ஏற்படும் இறையாற்றலின் தொடர்பால் தீய சம்ஸ்காரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விடுகின்றன. இதனால் ஆசைகள் தூய்மையடைந்து மனமும் தூய்மையடைகின்றது.

மனமானது எந்தப் பொருளை அறிய வேண்டுமோ அந்தப் பொருளின் வடிவை எடுக்கிறது. மனதின் இந்த உருமாற்றத்தையே விருத்தி என்கிறார்கள். இந்த விருத்திகளின்றி அறிவு உதயமாவதில்லை. நாம் தூங்கும் போது எந்த விருத்தியுமில்லை. நமது மனமானது பல அடுக்குகளாக, பல நிலைகளாக உள்ளது. ஒவ்வொரு நிலைக்கும் ஒவ்வொரு விதமான குறிப்பிட்ட விருத்திகள் உள்ளன. புற அடுக்குகளில் விருத்திகளால் எழும் எண்ண அலைகள் ஸ்தாலமானவை. அவை புறப் பொருளைப் பற்றியவை. உயர்ந்த அடுக்குகளில் இருந்து கவிதை, கற்பனை, தத்துவ ஆராய்ச்சி போன்ற விருத்திகள் ஏற்படுகின்றன. ஆழ்மனதின் அடுக்குகளில் இருந்தே ஆன்மிகம் கலந்த புலன் கடந்த உண்மைகள் அறியப்படுகின்றன. நாம் சாதாரணமாக தூலநிலை எண்ணங்களை மட்டுமே உணர்கிறோம். ஆனால் மனதைத் தூய்மைப் படுத்துவதன் மூலமும், தியானம் செய்வதன் மூலமும் ஆழ்நிலைக்குச் சென்று நுண்ணிய எண்ண அலைகளோடு தொடர்பு கொள்ள முடியும். அந்நிலையில்தான் ஆன்மிகப் பேரொளி தரிசனம் வாய்க்கும்.

அதாவது ஆன்மாவுக்கும் புறப் பொருளுக்கும் தொடர்பை ஏற்படுத்துவது அறிவு. அப்படி தொடர்பு கொள்ள மனம் என்பது வேண்டியதிருக்கிறது. மனம் இருந்தால் மட்டும் போதாது, புறப் பொருளின் வடிவை அது எடுக்கும் விருத்தி என்கிற நிலை வேண்டும். ஆன்மாவின் ஒளியானது இந்த விருத்தியின் மீது விழும் போதுதான் அறிவு உதயமாகும். விருத்தி என்பது எண்ண அலைகளே. புற உலகைப் பற்றிய ஸ்தூல விருத்திகள் குறைந்த அளவே ஒளியைப் பிரதிபலிக்கின்றன. ஏனென்றால் புற உலகில் மனதின் விருத்தி அதிகரித்து விடுவதால் ஆன்மாவின் ஒளிப் பிரதிபலிப்பு குறைந்து விடுகின்றது. எனவே ஆன்மாவின் தன்ன்றிவு என்கிற நிலையும் குறைந்து விடுகின்றது. ஆனால் உள்முகமாக விளங்கும் நுண் விருத்திகள் அதிக ஒளியைப் பிரதிபலிக்கின்றன. ஒளியைத் தக்கவைத்துக் கொள்கின்றன. எனவே தன்றிவு மிக்கதாக விளங்குகின்றன. எனவேதான் தியானத்தில் உள்ளே போகப் போக பல வகையான ஒளி தரிசனத்தைக் காணலாம் என்கிறார்கள். மனதின் ஆழத்தில் மூழ்க மூழ்க சாதகன் ஒளியிலேயே மூழ்கி விடுகிறான். இதுவே ஆன்மாவை அடைந்து விட்டதற்கான அறிகுறி.

எனவே எல்லோருக்குள்ளும் ஆன்மாதான் உள்ளது என்றாலும், இந்த விருத்திகளின் இயல்பைக் கொண்டே ஒருவருக்கொருவர் வேறுபடுகிறோம். தூய விருத்திகள் அதிகம் உள்ளவர் அதிக ஆன்ம ஒளியைப் பிரதிபலிக்கிறார் என்று பொருள். இவ்வளவு தூரம் விருத்திகளைப் பற்றிச் சொல்வானேன் ? என்றால், தூய, நுண்ணிய விருத்திகள் உள்ளவர்களே தியானத்தில் நிலைக்க முடியும். சாதாரண நிலையில் விருத்திகள் எழுவதும், விழுவதுமாக இருக்கின்றன. அந்த இரு செயல்களுக்கும் உள்ள இடைவெளி குறைவாக இருப்பதால் அதை நம்மால் தெரிந்து கொள்ள முடியவில்லை. தியானத்தின் போது ஒரே விருத்தி செயல்படும். அது மெதுவாக எழுவதும், விழுவதுமாக இருக்கும். இதை சாதகர் உணர்வார். சமாதி நிலையில் அடங்கி நிற்கின்றன. கர்ம பீஜம் முற்றிலும் அழியும் வரை அது அடங்கி நிற்கும் பிறகு எந்த வாசனையுமில்லை, விருத்தியுமில்லை. சர்வமும் ஒளிமயம். அதுவே சிவமயம்.
www.vediceternallife.blogspot.com

No comments:

Post a Comment